Monday, 25 August 2014

ஏரோபோனிக்ஸ்

ஏரோபோனிக்ஸ்
ஏரோபோனிக்ஸ் என்கிற முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழு வதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்து விட்டால் செடிகள் ஜோராக வளரும்.

மண்ணில்லாத கோபுர விவசாயத்தில், 15 நாட்களில் 30 டன் தக்காளி அறுவடை செய்யும் முறையை கண்டுபிடித்துள் ளார், கோவை வேளாண் பட்டதாரி வாலிபர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் பிரபுசங்கர்(41). வேளாண் பொறியியல் பட்டதாரியான இவர் புனே வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக நவீன விவசாய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறைந்த பரப்பளவில் பயிர்சாகுபடி செய்து லாபம் ஈட்ட வேண்டுமென்பதில் முனைப்புடன் செயல்பட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் உதவியுடன் ஏரோபோனிக்ஸ் முறையில் கோபுர விவசாயம் (மண்ணில்லாத விவசாயம்) என்ற நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு வருகிறார். இதன்மூலம் ஆண்டு முழுவதும் எந்த சீதோஷ்ண நிலையிலும் எல்லா வகை காய்கறிகளையும் விளைவிக்க முடியும் என்கிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை கிராமத்தில் இம்முறையில் தக்காளி சாகுபடி செய்துள்ள இவர் மேலும் கூறியதாவது: ஒரு ஏக்கர் நிலத்தில் வழக்கமாக 5 ஆயிரம் தக்காளி நாற்றுக்கள் மட்டுமே நடவு செய்ய முடியும். 

ஆனால் இப்புதிய தொழில்நுட்பத்தில் கால் ஏக்கர் பரப்பளவில் 10ஆயிரம் தக்காளி நாற்றுக்கள் நடவு செய்யலாம். பிவிசி பைப் அல்லது காற்று புகாத குழாய்களில் அடுக்கடுக்காக தக்காளி நாற்றுக்கள் நடவுசெய்யப்படுகிறது. ஏசி, ஏர்கூலர், காற்று, தண்ணீர் இரண்டையும் கலந்து தெளிக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறுவகை சாதனங்கள் இம்முறை விவசாயத்திற்கு தேவைப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண தக்காளி 100 நாட்களில் பலன் தரத்தொடங்குகிறது. ஆனால் இம்முறையில் 45 நாட்களிலேயே பலன் கிடைக்கும். 15 நாட்களில் 30 டன் தக்காளி அறுவடை செய்யப்பட்டுவிடுகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு 6 முறை தக்காளி சாகுபடி செய்யமுடியும். 

கால் ஏக்கரில் ஒரு ஆண்டுக்கு 150 டன் தக்காளி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் செடிக்கு 500 லிட்டர் நீர்மட்டுமே செலவாகிறது. ஒரு முறை செலவழித்து 15 ஆண்டுகள் வரை இதில் பயிர் செய்து பலன் பெறலாம். கீரை முதல் அனைத்து வகை காய்கறிகளையும் இதில் சாகுபடி செய்யலாம்.