யானை :”வழித்தடம் தேடி.....”
மேற்குத்தொடர்ச்சி மலை.இது வனவிலங்குகள் வாழ ஏற்ற இடம்.எங்கு பார்த்தாலும் அடர்ந்தகாடுகள்.வனவிலங்குகள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள இடம்.தேவையான உணவு,நீர் கிடைக்கக்கூடிய இடம்.
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலை. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகைஇருவாழ்விகளும் உள்ளன.
இம்மலைத்தொடர் மகாராஷ்ரா, குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில்முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) . இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக விளங்குகிறது.
மேற்குதொடர்ச்சி மலையில் தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என பல நதிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள உயர்ந்த சிகரங்கள் ஆனைமுடி (2695 அடி), தொட்டபெட்டா (2637). பலதரப்பட்ட தாவரங்கள், முட்புதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இங்கு உயிர் வாழ்கின்றன. இலையுதிர்காடுகள், ஊசியிலை காடுகள், அடர்காடுகள், சோலை காடுகள், பசுமைமாறா காடுகள் என உயிரினங்களின் வாழ்விடங்களும் உள்ளன. இம்மலைத் தொடரில் ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களில் 1000 முதல் 9 000 மி.மீ., அளவு மழை பொழிகிறது. 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இங்கு 4000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன. இதில் 56 வகை தாவரங்கள் வேறெங்கும் இல்லாத வகையில், இம்மலைத் தொடரில் மட்டுமே காணப்படுகின்றன. 1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளவை. 63 சதவீத மரவகைகள் இங்குள்ளன.
விலங்குகளில், 120 வகையான பாலூட்டி இனங்களும், 121 வகையான நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற உயிரினங்களும், 600 வகையான பறவைகளும், 157 வகையான ஊர்வன இனங்களும்,218 வகையான மீன் இனங்களும் இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய ‘கூரை மன்னி’, மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன. காட்டுப் பன்றி, கீரி, நீர்நாய், மரநாய் போன்ற இனங்களைச் சேர்ந்த 31 வகைகளில் 12 இங்கு உள்ளன. 15 வகை பூனை இனங்களில் ஐந்து வகை இம்மலைத் தொடரில் உள்ளது. உலகளவில் உள்ள 4 வகை கழுதைப் புலி வகையில் ஒரு வகை இங்குள்ளது. ஆறுவகை நரி, நாய், ஓநாய் போன்றவற்றில் ஐந்து வகை இங்குள்ளன. நான்கு வகை கரடிகளில் ஒன்று, இரண்டு வகை முயல்களில் ஒன்று இங்குள்ளது. இந்தியாவில் உள்ள 15 குரங்கு வகைகளில் ஐந்து இங்கு உள்ளன. 218 மீன்வகைகளில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன.
யானைகள்:-
மேற்கு தொடர்ச்சி மலை யானைகளின் சொர்க்கம் என்றால் அதில் மிகை இல்லை.இங்கே 6700க்கும் மேற்ப்பட்ட யானைகள் வசிப்பதாக 2005ஆம் ஆண்டு வனத்துறையின் ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், ஈரோடு, அந்தியூர், ஆனைமலை, மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மிக மிக அதிகம். யானைகள் மற்ற எந்த விலங்குகளை போலவும் இல்லாமல் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவை. சரியான ‘காடோடி’கள். அதற்குக் காரணம் அவற்றின் உணவுப் பழக்கம்.
ஒருநாளுக்கு 100 முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணுகின்றன இந்த யானைகள். அதோடு 100 முதல் 150 லிட்டர் அளவில் தண்ணீர் குடிக்கின்றன. வறட்சிக் காலங்களில் உணவு தேடி பல நூறு கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஒரே ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் நீரும் தேவையென்றால் குடும்பமாகவே (5லிருந்து 15யானைகள்) வாழக்கூடிய இந்த உயிரினத்திற்கு எவ்வளவு உணவும் தண்ணீரும் தேவைப்படும்! அதனால் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முகாமிட்டு அங்கிருக்கிற தாவரங்களை மொத்தமாக உண்டு காலிசெய்த பின்தான் அங்கிருந்து நகரும்.அடுத்து? அடுத்த காடு... அங்கே மொத்தமாக சாப்பிடுவதும்... மீண்டும் அடுத்த காடு... இப்படி ஒரு சுற்று முடித்து, பழைய காட்டிற்கு வந்தால் அங்கே தேவையான தாவரங்கள் மீண்டும் வளர்ந்துவிடும்! இயற்கையாக நடைபெறும் சுழற்சி இது.
யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ அதை அப்படி அழைப்பது வழக்கம். அதாவது அவை மரங்களை உடைத்துப்போட்டும், புதர்களை மிதித்து அழித்தும், பிடுங்கியும் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளை புல்வெளிகளாக மாற்றுகின்றன. இதனால், பல உயிரினங்களுக்கு உணவோடு வாழ ஏற்ற இடம் உருவாகிறது. இறந்த யானையை அழிந்துவரும் பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகள், நரி, கழுதைப்புலி, செந்தாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் உண்கின்றன. இது பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. யானையின் சாணத்தில் ஜீரணிக்கப்படாத உணவு துணுக்குள், விதைகள் அணில், வௌவால், வண்டு, பூச்சிகள் என பல விலங்குகளுக்கும் உணவாகிறது. வறட்சிகாலத்தில் யானைகள் நதிக்கரையோரம் தோண்டுகிற ஊற்றுக்குழிகள் மற்ற விலங்குகளின் தாகத்தை தணிக்கிறது.
காடுவிட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களுக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் மட்டுமே பயணிக்கும் குணம் கொண்டவை. இதை யானைகளின் வழித்தடம் (ELEPHANT CORRIDORS) என்று அழைக்கிறார்கள்.வயதில் மூத்த பெண் யானையே அந்தக் கூட்டத்தை வழி நடத்திச் செல்லும்.
ஆறாயிரம் யானைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவை பயன்படுத்துகிற வழித்தடங்கள் 19தான்! அதில் நான்கு பாதைகள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்கின்றன.இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் யானைகள் வாழ்ந்து வருகின்றன.ஆனால் இப்போதோ நகரமயமாதல்,பொருளாதாரவளர்ச்சி என்ற போர்வையில் யானைகளின் வழித்தடம் ஆக்ரமிக்கப்படுகின்றன.இதனால் காலம்காலமாக காடு விட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களது பாதையினை மறந்து பயணிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.இல்லை இல்லை நாம் ஏற்படுத்துகின்றோம்.
வால்பாறை செல்லும் பாதை |
வால்பாறை பகுதி நான்கு பக்கமும் மலைக்காடுகள் சூழ்ந்த பகுதி. ஒருபக்கம் ஆனைமலை புலிகள் சரணாலய காடுகள். இன்னொரு பக்கம் இரவிக்குளம் தேசிய பூங்கா. வால்பாறையின் மேலே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், வளச்சல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என நான்கு பக்கமும் காடுகள் சூழ நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நான்கு காடுகளும் யானைகளின் முக்கிய வாழ்விடங்களாகவும் அவற்றிற்கு தேவையான உணவினை வழங்குபவையாகவும் உள்ளன. காட்டுயானைகள் இந்தக் காடுகளில் இருந்து மற்ற காட்டிற்குள் செல்வதாக இருந்தால் வால்பாறையின் பிரதான தேயிலைத் தோட்டங்களை கடந்தே செல்ல வேண்டியதாயிருக்கிறது. இதை மனதில் வைத்து 1920களில் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களை உருவாக்கும் போதே பிரிட்டிஷ் அரசு ’துண்டுச் சோலைகள்’ எனப்படும் வனப்பகுதிகளை வால்பாறையில் அமைத்தது. துண்டுச் சோலைகள் என்பது தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பெரிய அளவிலான வனப்பகுதிகளை வனவிலங்குகளுக்காக விட்டுவைப்பது. இதன் மூலம் யானைகள் மட்டுமல்லாது இன்னபிற விலங்குகளும் தன் பாதையிலிருந்து விலகாமல் இந்தத் துண்டுச் சோலைகளின் வழியாக ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு இடையூறின்றிப் பயணிக்கும.ஆனால் இன்றோ அந்த துண்டு சோலைகள் அழிக்கப்பட்டு,ஆக்ரமிக்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது.என்னதான் மனிதர்கள் வனத்தினை அழித்திருந்தாலும் யானைகள் இப்போதும் அந்தத் துண்டாகிப் போன சோலைகளை பயன்படுத்தியே நகர்கின்றன. அதுவும் மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் மட்டுமே.யானைகளுக்கு இருக்கும் அந்த அறிவு கூட மனிதனுக்கு இல்லை.அவற்றின் வழித்தடங்களினை ஆக்ரமித்துக்கொண்டு யானை நம்மிடத்திற்குள் வந்துவிட்டது என கூக்குரலிடுகின்றான்.
தமிழகத்தில் யானை- மனித மோதல் அதிகம் நடக்கும் பகுதியாக கோவை மாவட்டம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் மேட்டுப்பாளையம்- கல்லாறு பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் வனத்தையொட்டிய பகுதிகளில் பெருகிவிட்ட கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்களால் யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.113 ஏக்கரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் புலங்கள் சாடிவயல்- தாணிக்கண்டி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி, போதிய துறைகளின் அனுமதியின்றி, கட்டுமானங்களை நிறுவியுள்ளது உலகப்புகழ் பெற்ற ஈஷா யோகா மையம் . ஆனால், அப்பகுதியில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலுக்கு ஈஷா மட்டும் காரணமல்ல, போதிய அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா விடுதி, சின்மையா சர்வதேச உறைவிட பள்ளி உள்ளிட்ட 15 அமைப்புகளும் காரணம்.மலையிடப் பாதுகாப்பு குழு,வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை முதலான அரசுத்துறையிடமிருந்து தடையில்லாச்சான்று பெற வேண்டும்.ஆனால் எவ்வித அனுமதியும் பெறாமல் யானையின் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளை ஒட்டி தனியார் கட்டடங்கள் அமைவதை தடுக்க வேண்டிய அரசு அமைப்புக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. கட்டடங்களால், வனப்பகுதியின் தன்மை, சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அரசு அமைப்புகளுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை அகற்ற தயவு தாட்சண்யம் பாராமல் உரிய நேரத்தில் அரசு அமைப்புகள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மனித-விலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.எதிர்கால சந்ததியினருக்கு யானை என்ற விலங்கினை விட்டுச்செல்ல முடியும் இதே நிலை தொடர்ந்தால் புகைப்படங்களில் மட்டுமே யானை என்ற விலங்கு இருந்ததை காண்பிக்கமுடியும்.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த திரு கஸ்தூரி ரங்கன் அவர்களது அறிக்கை
No comments:
Post a Comment