Monday 3 February 2014

மூலிகைச்செடிகள் பாகம் 5

மூலிகைச்செடிகள் பாகம் 5

அம்மான் பச்சரிசி:-

மூலிகைச்செடி என்று கூறிவிட்டு இது என்ன பச்சரிசி புழுங்கலரிசி என பெயர் கூறுவது விந்தையாக உள்ளதா?இதன் பெயர் அம்மான் பச்சரிசி தான்.தமிழில் அம்மான் பச்சரிசி என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் Euphorbia hirta என்பது ஆகும்.

வகைப்பாடு :-

திணை:    (இராச்சியம்) தாவரம்

வகுப்பு :-  Magnoliopsida

வரிசை:  Magnoliophyta

பேரினம்:  Euphorbia

இனம்:   E. hirta

அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு.இச்செடிகள் சாதாரணமாக தரிசு நிலங்கள், சாலை ஓரப்பகுதிகள் மற்றும்  ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் காணப்படும்.களைச்செடி போல தோற்ற்ம் தரக்கூடியவை.கால அளவு கிடையாது ஆண்டு முழுவதும் பரவலாக காணப்படுபவை.உயரமாக வளரக்கூடிய செடி வகை.சுமார் 50 செ.மீ வரை வளரும்.இலைகள் அமைப்பு எதிரெதிராக அமைந்தவை.சொரசொரப்பாக காணப்படும்.சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் இலைகள் காணப்படும்.சிறு சிறு பூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும்.இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு.


வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்

சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்

ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே

கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- என அகத்தியர் குணபாடத்தில் அம்மான் பச்சரிசி பற்றி கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பலன்கள்:-

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது தடவினால் கொப்புளங்களின் வீக்கங்கள் குணமாகும்.

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
இதன் இலையை கிள்ளினால் பால் வரும்.அதனை மரு உள்ள இடத்தில் தடவியும் இலைகளினை நன்கு கசக்கி அதனையும் மருவின் மேல் தடவி வர மரு உதிர்ந்து விடும். 

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.

இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.

No comments:

Post a Comment