திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?பாகம் 6
என்னதான் தீர்வு?
என்னதான் தீர்வு?
பத்திரிகைகள், பொருளாதார நிபுணர்கள், பொறுப்புள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலரும் அதிகரித்துவரும் சீனாவின் இறக்குமதி பற்றியும், தேவையில்லாத மூலப்பொருள் இறக்குமதி அதிகரிப்பு பற்றியும், ஏற்றுமதி குறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவது பற்றியும் எச்சரிக்கை செய்தவண்ணம் இருந்தும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நிதியமைச்சரும் பிரதமரும் இருந்தனர் என்பதுதான் இன்றைய சிக்கலுக்கு மிகப்பெரிய காரணம்.
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்' என்பார் வள்ளுவப் பேராசான். ஆனால், இடிப்பார் இருந்தும், எச்சரிக்கைகள் பல தரப்பட்டும் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் தேசம் கொள்ளை போவதையும் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையே ஆட்டம் காண்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மன்மோகன் சிங் அரசும் நிதியமைச்சகமும் என்பதுதான் வேதனை.
எல்லா தரப்பிலிருந்தும் விடுத்த பொது எச்சரிக்கைக்குப் பின்னர்தான், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 127 பில்லியன் டாலராக எகிறியது. 2006-07 முதல் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையான 175 பில்லியன் டாலரில் இது 75 சதவீதமாகும். ஒன்று "இவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது' என்கிற அகம்பாவ மனோபாவம் காரணமாக இருக்க முடியும். இல்லையென்றால், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே, அவர்களது ஆசியுடன்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.
சரி, இந்த அளவுக்கு சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க முற்பட்டோமே, அதைப் பயன்படுத்தி, சீனாவுடனான எல்லைத் தகராறு உள்பட அனைத்துத் தகராறுகளையும் தீர்த்துக் கொள்ளவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஆதரவு திரட்டவும் சீனாவுடனான வர்த்தக உறவை இந்தியா பயன்படுத்திக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை. சீனா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் தெளிவின்மையையும், ராஜதந்திரரீதியாகவும், தொலைநோக்குச் சிந்தனையுள்ள தேசிய தலைமைப் பண்பிலும் தோல்வியுற்றதையே இது எடுத்துக்காட்டுகிறது.
வீண்ஜம்பம், நிர்வாகக் குளறுபடி
சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக வளர்ந்து வரும் நாட்டை, உள்ளும்புறமும் வீண்ஜம்பம் பேசியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குழப்பி மோசமாக நிர்வகித்து வருகிறது. 2005-06, 2006-07இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதத்தைத் தாண்டியதையும், நிதிப் பற்றாக்குறை குறைந்துவருவதையும், உலகம் முழுதும் உலா வந்த போலி கடன்கள் காரணமாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துவருவதையும் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அகமகிழ்ந்து, தன்னிலை மறந்தனர். இந்த மதிமயக்கமான தருணத்தில், இறக்குமதிக்கும், இந்தியர்கள் அன்னிய முதலீடு செய்வதற்கும் கதவுகளை மத்திய அரசு திறந்துவிட்டது.
முதிர்ச்சியடைந்த தலைமையாக இருந்திருந்தால், நிதி மற்றும் வெளியுறவை நிலைப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள். வரிவிலக்கைத் திரும்பப் பெறவும், அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவும் அதுதான் சரியான தருணமாகும்.
2005 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிலக்குத் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் எச்சரித்திருந்தனர். ஆனால், பட்ஜெட்டில் அதுபற்றி மெüனம் சாதித்தனர். அதன் காரணமாக வரிவிலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.5 லட்சம் கோடியாகவே நீடித்தது.
இந்தியா ஏற்கெனவே வல்லரசாக ஆகிவிட்ட தோரணையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டது. 2008இல் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு தனது எல்லையைத் தாண்டி வரிவிலக்கை அதிகரித்தது. அதன் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டதுடன் சீனாவும், மற்ற நாடுகளும் தங்களது மலிவான பொருள்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க வழிகோலப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரப் பேரழிவு 2005-06 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தது. இதை ஆய்வு செய்து மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், இந்தப் பேரழிவு 2011-12இல் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது.
தீர்வுதான் என்ன?
இப்போது, இதற்கு தீர்வுதான் என்ன? முதலீடுகளுக்காக கையேந்துவதோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்வதுபோல வெளியிலிருந்து கடன் வாங்குவதோ இதற்குத் தீர்வல்ல. இது புற்றுநோய்ப் புண்ணுக்கு மருந்து தடவுவது போன்றது. அது வேதனையை சற்று மட்டுப்படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்திவிடாது. அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்?
முதலில், நிதிப் பற்றாக்குறையில் ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி கூடுதலாக சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்துவதை, இப்போதைய பொருளாதார நெருக்கடி தீரும் வரையில் ஒத்திவைப்பதாக அறிவிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அரசு உண்மையான அக்கறையுடன் உள்ளது என்பதை இது உணர்த்தும். முதலீட்டாளர்களுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் சற்று நம்பிக்கை ஏற்படும். அவசர அவசரமாக முதலீடுகளைத் திரும்பி எடுத்துக் கொண்டுபோக எத்தனிக்க மாட்டார்கள்.
அடுத்து, வரிவிலக்கு அளித்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை வெளிக்கொணர வேண்டும்.
ஆபரணம் செய்யப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் 3 ஆயிரம் டன் முதல் 6 ஆயிரம் டன் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதை வெளிக் கொணரத் தகுந்த வட்டி விகிதத்துடன் தங்கத்தின் மீது கடன் பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் 200 பில்லியன் டாலர் கிடைக்கும்.
அதே அளவு தொகை அன்னியச் செலாவணி கையிருப்பும் சேர்ந்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எதிர்பாராதவகையில் இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க இயலும்.
2012 பட்ஜெட்டில் இதைச் செயல்படுத்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், அப்போது அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடியவர்கள், கருப்புப் பண முதலைகளுடன் தன்னையும் இணைத்துப் பேசுவார்களோ என அஞ்சியதால் அவர் இதைச் செய்யவில்லை. பிரணாப் முகர்ஜியின் புத்திசாலித்தனமான முடிவு அரசியல் காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போயிற்று.
இப்போது இதைச் செய்வதற்கான அரசியல் உறுதி அரசுக்கு இருக்கிறதா? இப்போது இதைச் செய்யவில்லை என்றால், வேறு வழியில்லாமல் இதுபோன்றோ அல்லது இதைவிடக் கடுமையான நடவடிக்கைகளையோ அரசு பின்னர் மேற்கொள்ள நேரிடும் என்பது மட்டும் உறுதி.
பொருளாதார நெருக்கடி நிலை தோன்றும் வகையில் இப்போதைய சூழ்நிலை உள்ளது. எனவே, 1991இல் செய்தது போல, எதிர்க்கட்சியினருடன் கலந்துபேசி கருத்தொற்றுமை அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதுதான் தகுந்த தருணம்.
எங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தில், மக்களவைத் தேர்தலை மட்டுமே குறியாக வைத்து மன்மோகன் சிங் அரசு தொடர்ந்து செயல்படுமேயானால், "அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலமானார்' என்பதுபோல இந்தியப் பொருளாதாரம் திவால் நிலைக்குத் தள்ளப்படும்!(நன்றி:- தினமணி)
No comments:
Post a Comment