Monday, 28 October 2013

பவளப்பாறைகள்-ஓர் பார்வை

பவளப்பாறைகள்

பவளப்பாறைகளில் மீன்கள்
பவளப்பாறைகள் கடல்பகுதியில் தட்ப வெட்ப நிலையினை சமப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்றால் அதில் மிகைஇல்லை.ஆனால் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் புவியினை கெடுத்து எதுவெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உதவுமோ அதனையும் அழித்து வருகிறான்.கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.இவைகள் கடலிற்குள் உயிர் வாழ்கின்றன. இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. 
இவை உருவாவதற்கு விசேஷ சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.


சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C - 24°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.

பவளப்பாறை அமைப்பு
         கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும். இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.


பவளப்பாறைகளில் உயிரினங்கள்
 இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.

 
அழகிய வடிவத்தில் பவளப்பாறை
கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும். கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும். பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன.


பவளப்பாறையில் உயிரினங்கள்
இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.


வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன.

கிரேட் பாரியர் ரீஃப் 
உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃப் ஆகும்.இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.

கிரேட் பாரியர் ரீஃப் 
பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனைவிண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை. உயிரியற் பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.

இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது.

இலட்சத்தீவில் பவளப்பாறை அமைப்பு
உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது. பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

பசுமை அமைதி அமைப்பின் விழிப்புணர்வு 
கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்பு செயற்கைகோள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இயற்கை வளத்தை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு .அதிலும் கடல் வளத்தினையும் சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும் கடல் வாழ் உயிரினங்களுக்கு தேவையாக இருக்கும் இந்த பவளப்பாறைகளினை பாதுக்காக்க உறுதி பூணுவோம்.


3 comments:

  1. படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி...

    சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல.தங்கள் ஆலோசனையினை மகிழ்வுடன் ஏற்று அதனினை உடனடியாக செய்துள்ளேன்.நன்றி தங்கள் ஆதரவிற்கு.

      Delete
  2. விளக்கங்கள் அருமை.தொடரட்டும் உங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணி.

    ReplyDelete