Monday, 23 December 2013

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்

"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்:-



வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.

என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.

இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும்.

மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.

ரூ.2 ஆயிரத்து 414 மதிப்பு கொண்ட அந்த பொருள்களை, 50 சதவீத மானியத்தில் ரூ.1,207-க்கு தமிழக அரசு வழங்குகிறது. ஒரே நபருக்கு 5 முறை மானிய விலையில் தோட்டம் அமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வழங்கப்படும்.

எங்கு அணுகுவது?: சென்னை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாதவரம், சென்னை - 51. தொலைபேசி: 044 - 25554443.

கோவை - தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், 8, தடாகம் சாலை, கோவை - 641013, தொலைபேசி: 0422 - 2453578.

www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் தாமோதரன் பேசியது:

இந்தியாவில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நகரவாசிகள், தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பெண்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார் அவர்.

மாடி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: இந்த திட்டம் சென்னை மற்றும் கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உரங்களைத் தயாரிக்க சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இங்கு உணவுக் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் என அனைத்து விதமான குப்பைகளும் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தும் என்று மேயர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு

OPERATIONAL MANUAL Of DO IT YOURSELF KIT

INPUT DETAILS OF DO IT YOURSELF KIT

DO IT YOURSELF KIT - APPLY NOW

Sunday, 8 December 2013

மண் வளம் மேம்பட ....

மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.

1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

பலபயிர் வளர்ப்பு:-

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன

தானியப்பயிர் :
 
சோளம்              :-                   1 கிலோ
கம்பு                     :-                  1/2 கிலோ
தினை                  :-                 1/4 கிலோ
சாமை                 :-                  1/4 கிலோ

பயிறு வகை :

உளுந்து                                   :- 1 கிலோ
பாசிப்பயறு                            :- 1 கிலோ
தட்டைப்பயிறு                     :- 1 கிலோ
கொண்டைக்கடலை         :-1 கிலோ

பசுந்தாள் பயிர்கள் :
 
தக்கை பூண்டு                      :- 2 கிலோ
சணப்பை                                :- 2 கிலோ
நரிப்பயறு                               :- 1/2 கிலோ
கொள்ளு                                 :- 1 கிலோ

மணப்பயிர்கள்:-

கடுகு                                       :-1/2 கிலோ
வெந்தயம்                             :-1/4 கிலோ
சீரகம்                                      :-1/4 கிலோ
கொத்தமல்லி                      :- 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு உண்டானது.

Saturday, 7 December 2013

அக்னி அஸ்திரம்

அக்னி அஸ்திரம் :-


































இந்த வகையான பூச்சி தாக்குதலினை எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் பயன்படுத்துதல் ஆகும்.

குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம் தெளித்ததால் கொய்யா மரம் இந்த பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.

அக்னி அஸ்திரம் என்றால் என்ன?:-
நாட்டு பசுமாட்டு சிறுநீர் புகையிலை பச்சை மிளகாய் வேம்பு இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

தயாரிக்க தேவையான பொருட்கள் :

புகையிலை:- அரை கிலோ,
பச்சை மிளகாய் :- அரை கிலோ,
வேம்பு இலை :- 5 கிலோ நாட்டு
பசுமாட்டு சிறுநீர் (கோமியம்):- 15 லிட்டர்
மண்பானை.

தயாரிக்கும் முறை:


நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில்(வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது,வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.) ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?

100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?

பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.

எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.


Sunday, 1 December 2013

ஜீவாமிர்தம்...


ஜீவாமிர்தம்...

ஜீவாமிர்தம் என்றால் என்ன?

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

ஜீவாமிர்தக் கரைசல் ஓர் வளர்ச்சி ஊக்கி ஆகும். அது நுண்ணுயிர்களைப் பெருக்கும் ஓர் ஊடகம். பத்து கிலோ சாணத்தில் 3 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்கள் ஜீவாமிர்தக் கரைசலுடன் மண்ணுக்குள் செல்லும். அப்போது அவை மீண்டும் பல்கிப் பெருகும். இதன் மூலம் நிலம் வளம் பெற்று நல்ல விளைச்சலைப் பெறமுடியும். நுண்ணுயிர்களைப் பொறுத்தவரை பெருக்கம் அடைந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், மழை பெய்து நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அவை பெருக்கம் அடையாது. 

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?

தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ

நாட்டு பசுங்கோமியம்-10 லிட்டர்

வெல்லம் (கருப்பு நிறம்)-2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் ( அ ) பனம் பழம் -4

பயறு வகை மாவு - 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)

பயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட மண் கையளவு

தண்ணீர்-200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை:

தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம் ,பயறு வகை மாவு,வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும் .இதனுடன் 200 லிட்டர் தண்ணிரை சேர்த்து நிழலான இடத்தில தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும் . தினமும் 2 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும்.

பயன்படுத்தும் முறை:

ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.

ஜீவாமிர்தக் கரைசலினை நேரடியாக பயிர்களுக்குப் பயன்படுத்த கூடாது. கெட்டியான திரவ நிலையிலிருக்கும் ஜீவார்மிதக் கரைசலை தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளித்தால் இலை, தழைகளில் உள்ள துளைகள் மூடப்பட்டுவிடும். இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூச்சை நிறுத்திவிட்டு எப்படி நம்மால் உயிர் வாழ முடியாதோ அதுபோலத்தான் பயிர்களும். தாவரங்கள் இலையில் உள்ள துளைகள் மூலமாகத்தான் சுவாசிக்கும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஜீவார்மிதக் கரைசலை பயிர்களுக்கு நேரடியாக தெளிக்க கூடாது. ஜீவார்மிதக் கரைசல் 20 லிட்டர், தண்ணீர் 200 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். இப்படி செய்வதுதான் சரியான முறை.

ஜீவாமிர்தக் கரைசலைத்தொடர்ந்து பயன் படுத்தி வந்தால், நிலத்தின் நாட்டு மண்புழுக்களின்எண்ணிக்கை பெருகும். நிலத்தின் மண் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி வேலை செய்து கொண்டுள்ளன என்று பொருள்.

இயற்கை முறைகளினை பயன்படுத்துவோம்.மண் வளம் காப்போம்.

வீட்டுத்தோட்டப்பயிர்கள்

வீட்டுத்தோட்டப்பயிர்கள் :-


 வீட்டுத்தோட்டத்தில் அனைத்துவகை காய்கறிகளும் பயிரிடலாம்.இருப்பினும் காலமறிந்து நடுவது நன்மை பயக்கும் அல்லவா.

இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை :-

தக்காளி மற்றும் வெங்காயம் - ஜுன் – செப்டம்பர்
முள்ளங்கி - அக்டோபர் – நவம்பர்
பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி
வெண்டைக்காய் – மார்ச் – மே

கத்தரி - ஜுன் – செப்டம்பர்
பீன்ஸ் - அக்டோபர் – நவம்பர்

தக்காளி – ஜுன் – செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை - மே

மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர்
தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம் - மார்ச் – மே

வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – ஆகஸ்டு
முட்டைக்கோஸ் - செப்டம்பர் – டிசம்பர்
கொத்தவரை - ஜனவரி – மார்ச்

பெரிய வெங்காயம் - ஜுன் – ஆகஸ்டு
பீட்ருட் - செப்டம்பர் – நவம்பர்
தக்காளி - டிசம்பர் – மார்ச்
வெங்காயம் - ஏப்ரல் – மே


கொத்தவரை – ஜுன் – செப்டம்பர்
கத்தரி மற்றும் பீட்ருட் - அக்டோபர் – ஜனவரி

பெரிய வெங்காயம் - ஜுலை – ஆகஸ்டு
கேரட் -செப்டம்பர் – டிசம்பர்
பூசணி -ஜனவரி – மார்ச்

மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு
வெங்காயம் – ஜனவரி – ஆகஸ்டுவெண்டைக்காய் – செப்டம்பர் – டிசம்பர்
கொத்தமல்லி – ஏப்ரல் – மே


இந்த முறையில் பயிரிடுவது மலைப்பகுதிகளுக்கு ஏற்றது அல்ல என்பதினை நினைவில் கொள்ளவேண்டும்.

வீட்டுத்தோட்டத்தின் அருகில் இருக்கும் இடங்களில் கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்ற குறுகிய கால பயிர்களினை நடலாம்.இது மிக பலன்கொடுக்க கூடியது

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யலாம்.

பலவருட பயிர்கள் தொடர்ந்து பயன் தரும். அவை
முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.



Sunday, 17 November 2013

வெட்டிவேர்-ஓர் பார்வை

வெட்டிவேர்:-

    
வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம். இதன் வேர்  மணத்துடன் இருக்கும்.  இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும்

மூலிகையின் பெயர் -: வெட்டிவேர்.

தாவரக்குடும்பம் -: POACEAE.

தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.

வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.


இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும், 10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும். இதில் கவனிக்கப் படவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண்??? எனவே மண் அரிப்பை தடுப்பது நமது கடமைகளில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று உலகம் முழுவதும் ஒரு புல்லையே நம்பியுள்ளது. அது நம் நாட்டின் ''வெட்டிவேர்'' என்றால் பலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.பல்வேறு நாடுகளில் மண் அரிப்பைத்தடுக்கவும்,நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை பயன்படுத்துதலும் இல்லை.வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

கழிவு நீர் சுத்திகரிக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது
கரையோரம் மண் அரிப்பைத்தடுக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது.


வெட்டிவேர் நன்கு வளர்ந்த நிலையில்
கழிவு நீர் சுத்திகரிக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது
மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

கரையோரம் மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

வெட்டிவேர் நன்கு வளர்ந்த நிலையில்

மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

                                            LandFill ல் வெட்டிவேர் நடப்படுகிறது
வெட்டிவேர்

 



எங்கள் வீட்டு சமையல் அறை கழிவு நீரை சுத்தம் செய்ய நடப்பட்டுள்ள வெட்டிவேர்

எங்கள் வீட்டு சமையல் அறை கழிவு நீரை சுத்தம் செய்ய நடப்பட்டுள்ள வெட்டிவேர் அணிவகுப்பு
 
 வெட்டிவேர் இண்டர்நேஷனல் நெட்வொர்க்கின் வலை முகவரி இங்கே





Friday, 15 November 2013

இ.எம்.கலவை (E.M Solution)-ஓர் பார்வை

இ.எம்.கலவை:-

எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் என்பதன் சுருக்கம்தான் இ.எம். 
இத்திரவத்தில் நுண்ணுயிர்கள்  உறக்கநிலையில் இருக்கும்.

சிறந்த நுண்ணுயிரிகள் (ஈஎம்) என்றால் என்ன?

நுண்ணுயிரிகள் வெறும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறியதாக இயற்கையில்  எல்லா இடங்களிலும் இருக்கும் .சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் நுண்ணுயிரிகளின் பங்கு முக்கியமானது. நுண்ணுயிர்களில் ஏற்படும் இரசாயன மாற்றம்  மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்கள் வாழ உதவியாக உள்ளது என்றால் அதில் மிகையில்லை.நுண்ணுயிரிகளில் இரண்டுவகை நுண்ணுயிரிகள் உள்ளன.நன்மை தரவல்லவை. தீங்கு தரக்கூடியவை.

ஈஎம் தோற்றம்

1982 ல் Ryukyus பல்கலைக்கழகம், ஒகினவா ஜப்பானினைச்சார்ந்த Dr.Higa இயற்கையாகவே,சில நுண்ணுயிரிகள் கூட்டங்கள் நன்மை செய்கின்ற வகையில் செயல்படுகின்றன என கண்டறிந்தார்.அப்படி கண்டறியப்பட்ட நுண்ணுயிர் கூட்டங்களுக்கு ஈஎம் (சிறந்த நுண்ணுயிரிகள்)என பெயரிட்டார்.
E.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. 

ஈஎம் பூச்சி கொல்லியாக பயன்படுத்துதல்:-

ஈஎம் கலவையினை  ஒரு  இரசாயன கலப்பல்லாத பூச்சிகளை விரட்டும் கலவையாக பயன்படுத்தலாம். இது தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய் பரவுதலை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. இது தாவரங்களினைச்சுற்றி ஒரு அரண்போல அமைந்து நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

ஈஎம் கலவை தயாரித்தல்:-

நல்ல வெதுவெதுப்பான
குளோரின் கலக்காத நீர்                              :-     300 மில்லி

வெல்லப்பாகு                                                  :-      50 மில்லி

வினிகர்                                                              :-       50 மில்லி

எத்தில் ஆல்கஹால்                                   :-        50 மில்லி

ஈ.எம் திரவ செறிவுகள்                               :-        50  மில்லி

ஈ.எம் கலவை தயாரிக்க தேவையான அளவிலான கொள்கலனினை எடுத்துக்கொண்டு  வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லப்பாகு  சேர்த்து நன்கு கலந்து பின்னர், வினிகர் சேர்த்து நன்கு கலக்கி அத்துடன்  எத்தில் ஆல்கஹால் மற்றும் ஈஎம் சேர்க்க வேண்டும்.பின் கலக்கப்பட்ட கலவையினை   பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதில்  நறுக்கப்பட்ட பூண்டு சிறிய அளவில் சேர்த்து பிளாஸ்டிக்பாட்டிலின் முகப்பினை முடிந்தவரை  இறுக்கமாக மூடி இருண்ட இடத்தில் வைக்கவேண்டும்.நாள்தோறும் இருமுரையாவது முகப்பினை திறந்து உருவாகும் வாயுக்களினை வெளியேற்ற வேண்டும்.ஒரு இனிப்பு பழ வாசனை வரத்துவங்கி விட்டால் ஈஎம் பயன்படுத்த தயாராக உள்ளது.இக் கலவையினை  3 மாதங்களுக்கு ஒரு சீரான வெப்பநிலை கொண்ட ஒரு இடத்தில் சேமிக்கலாம். பூண்டு சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், சேமிக்கும் முன் வடிகட்ட வேண்டும்.இக்கலவையினை  குளிர்சாதன பெட்டியில் சேமிக்க கூடாது.

ஈஎம் பூச்சிகளை விரட்டும் கலவையாக  பயன்படுத்துதல்:-

20 மில்லி ஈ.எம் கலவையினை 2 லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலந்து தெளிப்பான் மூலம் பயிர் நனையுமாறு தெளிக்கவேண்டும்.தெளித்தல் பணி விதைகள் உருவாகும் முன்னரே அல்லது செடிகள் உருவாகும் முன்னரே அல்லது நோய்த்தாக்குதல் ஆரம்பமாகும் முன்னரே செய்யவேண்டும்.நோய்த்தாக்குதல் ஆரம்பித்து விட்டால் 30 மில்லி  ஈ.எம் கலவையினை 2 லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலந்து தெளிப்பான் மூலம் காலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.

ஈஎம் ஓர் இயற்கை தயாரிப்பு:-

ஈஎம் எனப்படுவது கலவையில் நன்மையுள்ள நுண்ணுயிர்கள் உள்ளன என கண்டறிய பயன்படுத்தப்படும் ட்ரேட் மார்க் ஆகும்

ஈஎம் ஆக்சிஜன் உயிர் வாழ தேவைப்படும் காற்று நுண்ணுயிரிகளும் ஆக்சிஜன் உயிர் வாழ தேவை இல்லாத நுண்ணுயிரிகளும் இணைந்து உள்ளது.

ஈஎம் மண்ணிற்குள் இருக்கும் நுண்ணுயிர்களுடன் ஒன்று சேர்ந்து மண்வளத்தை பாதுகாக்கிறது.

ஈஎம்  நச்சு அல்லது நோய்  பரப்பக்கூடியதன்று. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்று சூழலுக்குப் பாதுகாப்பானது.

ஈஎம் பயன்படுத்துதல்   மண் , பயிர் வளர்ச்சி மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.

ஈஎம் உபயோகம்:-

அன்றாட வாழ்க்கையில் வீட்டில் பயன்படுத்தலாம்

சமையலறை கழிவுகளினை மறுசுழற்சி செய்யவும் மற்றும் மதிப்புமிக்க கரிம பொருள் மாற்றவும் செய்யலாம்

மண் கட்டமைப்பு மேம்படுத்த , உற்பத்தி அதிகரிக்க மற்றும் நோய் மற்றும் களைகள் அழிக்க பயன்படுத்தலாம்

அனைத்து வகையான நீர், காற்று, மற்றும் மண் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீர்க்க;

விவசாயம் மற்றும் தோட்டக்கலை, பழம் மற்றும் பூ சாகுபடிக்கும்;

கால்நடை வளர்ப்பிற்கு

மீன் வளர்ப்பு,

தனிப்பட்ட உடல் சுகாதாரம் மற்றும் நோய்த்ததடுப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள்.

Dr. Teruo Higa அவர்களின்   BENEFICIAL AND EFFECTIVE MICROORGANISMS 

Sunday, 10 November 2013

இயற்கை பூச்சி விரட்டி

இயற்கை பூச்சி விரட்டி :-


பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம்.மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும்.உடல் நலத்திற்கும் ஏற்றது.

இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை விவசாயிகளுக்கு நன்மை தரவல்லவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இந்த இரண்டு வகை பூச்சிகளும் கொல்லப்படுகின்ரன அல்லது விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.



பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை:-


1. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய்
2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். (எ.கா) எருக்கு, காட்டமணக்கு
3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள்- (எ.கா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள்- (எ.கா) பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை


தேவையான பொருட்கள்: (ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)
1. காட்டாமணக்கு – 1/2 கிலோ
2. குமிட்டிகாய் – 1/2 கிலோ
3. ஊமத்தை – 1/2 கிலோ
4. பீச்சங்கு – 1/2 கிலோ
5. சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ
6. எருக்கு – 1/2 கிலோ
7. அரளி – 1/2 கிலோ
8. நொச்சி – 1/2 கிலோ
9. சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ
10. ஆடா தோடா – 1/2 கிலோ
11. நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ
12. வேம்பு – 1/2 கிலோ
13. மாட்டு கோமியம் – 1/2 கிலோ
14. மாட்டு சாணம் – 1/2 கிலோ
15. மஞ்சள் தூள் – 1/2 கிலோ


மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின் இலை தழைகளை எடுத்து சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும். அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம்.


பயன்படுத்தும் முறை:

இலைவழி ஊட்டம்/தெளிப்பு: பத்து லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம்.

சிறப்பான தன்மைகள்:

1  எளிதில் தயாரிக்கலாம்
2. குறைவான முதலீடு
3.தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது.
4. இயற்கையை பாதிக்காதவை
பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

நன்றி:-
வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர்

Saturday, 2 November 2013

தீபாவளி-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத தீபாவளியினை கொண்டாடுவோமே....

தீபாவளி:-
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான்.புது ஆடை,பட்டாசு,இனிப்பு வகைகள்.குதூகலமான பண்டிகை.ஆனால் நாம் கொண்டாடும் பண்டிகை நம் எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயற்கையின் படைப்புகளினை அழிக்கும் வகையில் கொண்டாடுவது நியாயமா.சிந்திப்போமா.அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டாம் எனக்கூறவில்லை.கொண்டாடுவோம் மகிழ்ச்சியாக ஆனால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில்.

தீபாவளி கொண்டாடுவதால் சுற்றுப்புறத்திற்கு என்ன கெடுதல் என்கிறீர்களா?

தீபாவளி பண்டிகையின் போது ஏற்படுகின்ற முக்கிய சுற்றுச்சூழல் பாதிப்புகள்

பட்டாசுகள் மூலம் காற்று மாசு (Air Pollution)
பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு(Noise Pollution)
அளவுக்கதிகமான நுகர்வு(Excessive Consumerism)

பட்டாசுகள் மூலம் காற்று மாசு:-

 பெரும்பாலான மக்களுக்கு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.தீபாவளி கொண்டாடும் போது பட்டாசு வெடிப்பது என்பது மிகவும் பொருத்தமான அவசியமான ஒன்றாக தெரிகிறது.ஆனால் சிறிய அளவிலான   மக்களுக்கு மாசுபட்ட நகரங்களில், பட்டாசுகள் வெடிப்பது தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஆனால் இதனால் ஏற்படும் தீவிர காற்று மாசுபாடு சுற்றுப்புறத்தினை மாசுபடுத்திகின்றன என உணர ஆரம்பித்துள்ளனர். பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் நச்சு பொருட்கள் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு தடையாக உள்ளது.வெளியிடப்படுகின்ற நச்சு வாயுக்கள் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை. பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் சத்தம் அதிக அளவில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மகத்தான துன்பத்தை ஏற்படுத்தும்.


துரதிர்ஷ்டவசமாக, நாம் பயன்படுத்தும் பட்டாசுகள்  பெரும்பாலும் மிக இளம் குழந்தைகளால் செய்யப்படுகின்றன.பட்டாசு தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்ற  பொருட்களில் மிகவும் நச்சுத்தன்மை இருப்பதால் குழந்தை தொழிலாளர்கள் பலர் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்படுகின்றனர்.மேலும் பட்டாசு தயார் செய்யும் போது விபத்துகளினால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களிலால் ஏற்படும் தீய விளைவுகள் :-

   வேதியியல் பொருள்கள்                                     விளைவிக்கும் தீங்கு
தாமிரம்                                                                           சுவாசக்குழாய் எரிச்சல்
கேட்மியம்                                                   இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு
ஈயம்                                                                           நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
மெக்னிஷியம்                         தூசி மற்றும் புகைகள் உலோக FUME காய்ச்சலை ஏற்படுத்தும்
சோடியம்                                                                         தோல்வியாதி
துத்தநாகம்                                                                      வாந்தி ஏற்படும்
நைட்ரேட்                                                                        மன அமைதி பாதிக்கப்படும்
நைட்ரைட்                                                                       புத்தி பேதலித்து கோமா ஏற்படும்

பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு

125 டெசிபலிற்கு மேல் வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தொலையில் ஒலி அளவினை ஏற்படுத்தும் பட்டாசுகளினை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலியினால் காது கேளாமை,உயர் இரத்த அழுத்தம்,இருதய கோளாறு,தூக்கமின்மை போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.



அளவுக்கதிகமான நுகர்வு

மனிதனால் உருவாக்கப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையினால் நமக்கு கிடைக்கும் பொருள்கள் கொண்டே.அதாவது பிளாஸ்டிக்,இரும்பு,துணி இவற்றிற்கான மூலப்பொருள்கள் அனைத்தும் இயற்கையின் மூலமாக நேரிடையாக கிடைக்கின்றன.இந்த மூலப்பொருள்கள் அனைத்தும் நம்மால் உருவாக்க இயலாது.அதாவது இந்த மூலப்பொருள்கள் அனைத்தையும் புதுப்பிக்க இயலாது.புதுப்பிக்க இயலாத இயற்கை பொருள்களின் சிதைவு  மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

நாம் தூக்கி எறியும் திட கழிவான மக்க இயலாத பொருள்கள்  நம்மை விட்டு நீஙக அதாவது இயற்கையோடு இரண்டற கலக்க நீண்ட வருடங்கள் ஆகும்.

இயற்கை பாதுகாப்பு  ஐந்து கோட்பாடுகளினை உள்ளடக்கியது.இந்த கோட்பாடுகளை வைத்து முக்கியமான நமது  இயற்கை சூழலை பாதுகாக்க முடியும் -

குறைக்க            :    நாம் பயன்படுத்தும் பொருட்கள் அளவைனை குறைப்பது
மறுபயன்பாடு :    பயன்படுத்தும் பொருள்களினை அதன் ஆயுற்காலம்                                                       முழுதும் பயன்படுத்துவது
மறுசுழற்சி:            மறுசுழற்சி செய்ய இயலும் பொருள்களினை மறு சுழற்சி 
                                    செய்வது
மறுபரிசீலனை:   நாம் ஏதாவது வாங்க தீர்மானிக்கும் போது தேவையா இந்த                                         பொருள்,என சிந்தனை செய்வது
மறுக்கும்:                தேவையின்றி பொருள்களினை வாங்க மறுப்பது.

இந்த சிந்தனைகளினை பின்பற்றி அதாவது நினைவினில் நிறுத்தி பண்டிகைகளினை கொண்டாடுவோம்.

உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....


Monday, 28 October 2013

பவளப்பாறைகள்-ஓர் பார்வை

பவளப்பாறைகள்

பவளப்பாறைகளில் மீன்கள்
பவளப்பாறைகள் கடல்பகுதியில் தட்ப வெட்ப நிலையினை சமப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்றால் அதில் மிகைஇல்லை.ஆனால் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் புவியினை கெடுத்து எதுவெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உதவுமோ அதனையும் அழித்து வருகிறான்.கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.இவைகள் கடலிற்குள் உயிர் வாழ்கின்றன. இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. 
இவை உருவாவதற்கு விசேஷ சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.


சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C - 24°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.

பவளப்பாறை அமைப்பு
         கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும். இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.


பவளப்பாறைகளில் உயிரினங்கள்
 இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.

 
அழகிய வடிவத்தில் பவளப்பாறை
கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும். கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும். பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன.


பவளப்பாறையில் உயிரினங்கள்
இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.


வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன.

கிரேட் பாரியர் ரீஃப் 
உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃப் ஆகும்.இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.

கிரேட் பாரியர் ரீஃப் 
பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனைவிண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை. உயிரியற் பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.

இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது.

இலட்சத்தீவில் பவளப்பாறை அமைப்பு
உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது. பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

பசுமை அமைதி அமைப்பின் விழிப்புணர்வு 
கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்பு செயற்கைகோள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இயற்கை வளத்தை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு .அதிலும் கடல் வளத்தினையும் சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும் கடல் வாழ் உயிரினங்களுக்கு தேவையாக இருக்கும் இந்த பவளப்பாறைகளினை பாதுக்காக்க உறுதி பூணுவோம்.


Sunday, 20 October 2013

மூலிகைச்செடிகள் பாகம் 4

மூலிகைச்செடிகள் பாகம் 4:-

மாதுளை:-

வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம் மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும்,சர்க்கரையும் மிகுந்த பழம்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.அடர் சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளை, பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் மாதுளையில் 12 முதல் 16 சதவீதம் வரை சர்க்கரைச்சத்து உள்ளது.

மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. உடம்பில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கிறது. எனவே வெயிலில் அலைபவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளலாம்.

மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=78%
மாவுப்பொருள்=15%
புரதம்=1.7%
கொழுப்பு=0.1%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.07%
இரும்புத்தாது=0.03 யூனிட்
வைட்டமின் C=16 யூனிட்
வைட்டமின் B2=10 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் மாதுளை பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.

வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு. மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு. குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.

இதயம் வலிமை அடையும். ஹீமோகுளோபினைக் கூட்டும் உயர்ந்த சாறு. வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது. 

இருமலைத் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதன் தோலையும், கிராம்பையும் சேர்த்து கஷாயம் செய்து உட்கொள்ளக் கொடுக்க, சீதபேதி குணமடையும்.

தொண்டைப்புண் உள்ளவர்கள் இந்த பழத்தின் சாறுடன் சிறிது படிகாரம் சேர்த்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் நாடாப்புழு இருந்தால் மாதுளை மரப்பட்டையுடன் கிராம்பு கலந்து கஷாயம் வைத்து குடிக்க புழுக்கள் இறந்து விடும்.

மார்புச்சளி உள்ளவர்கள் மாதுளைப்பூவைக் காய வைத்து, இடித்து, பொடியாக்கி நாலைந்து அரிசி எடை அளவு சாப்பிட்டு வர சளி கரையும்.
மேலும் வாந்தி, விக்கல், கருப்பையில் உள்ள புண்கள், மயக்கம், அல்சர் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக அமைகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மருந்துக்கு உதவும் பாகம்:-

பழம்,பழ ஓடு,பிஞ்சு

வளர்க்கும் விதம்:-

விதை,குச்சி


Thursday, 17 October 2013

மூலிகைச்செடிகள் பாகம் 3

மூலிகைச்செடிகள் பாகம் 3

நிலவேம்பு:-
 நிலவேம்பு இன்று அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகைச்செடியாகும்.அதற்கு காரணம் டெங்குகாய்ச்சல்.தமிழக அரசே நிலவேம்பு குடிநீர் குடிக்க அறிவுறுத்தியது என்றால் அதன் மருத்துவ குணங்கள் தெளிவுற விளங்கும்.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது. இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப்படும் ஒரு செடி வகையாகும்.இது சூரத்து நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால் கூறப்படுகின்றது. இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது.

மருந்துக்கு உதவும் பாகம்:-

எல்லா பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டது.

கட்டுப்படும் நோய்கள்:-

நில வேம்பு பசியைத் தூண்டவல்லது.பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் வலுப்பெற உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது

பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

காய்ச்சல் குறைய நிலவேம்பு 15 கிராம் கிச்சிலித் தோல் 5 கிராம் கொத்துமல்லி 5 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும்.

விவசாயிகளுக்குத்தேவையான தகவல் களஞ்சியம் .எம் எஸ் சுவாமி நாதன் அவர்களின் ஆராய்ச்சி அமைப்பின் இணையமுகவரியினை பார்க்க இங்கே சொடுக்குங்கள்