Wednesday 24 July 2013

திடக்கழிவு மேலாண்மை -அறிந்து கொள்வோம்


அறிந்து கொள்வோம் குப்பைகளினை கையாளும் விதங்களினை

”மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”

என்றான் முண்டாசுக்கவிஞன் பாரதி.பாரதியின் கூற்றுப்படி இன்றைய காலகட்டத்தில் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரங்களினை குப்பைகளினை கையாளும் விதங்களினை கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம்.

நம் நாடு பல்வேறு இயற்கை வளங்களினை தன்னகத்தே கொண்டது.காடுகள்,மலைகள்,நீர்வீழ்ச்சிகள்,ஆறுகள்,விலங்கினங்கள்,ஏரிகள்,குளங்கள்,நீர்வீழ்ச்சிகள்,தாவரவகைகள் நிறைந்த நாடு நம்நாடு.இயற்கை வளங்களினை அனுபவிக்க நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றனர்.நாம் எதிர்காலச்சந்ததியினருக்கு அந்த இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோமா? எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

சிறிது சிறிதாக இயற்கை அமைப்பை மாற்றி வருகிறோம்.அழித்து வருகிறோம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

கழிவுகள்:-
பயன்பாடுகள் முடிந்து தூக்கிவீசப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட அல்லது கழிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் கழிவுகள் ஆகும்.

இயற்கையில் எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை.

பிற விலங்குகளினை கொன்று தின்னும் விலங்குகள் பசியாக இருக்கும் போது மட்டுமே பிற விலங்குகளினை வேட்டையாடி உணவு உட்கொள்ளும்.தனது தேவை நிறைவேறிய பிறகு கொன்ற விலங்கின் மீதத்தை அப்படியே விட்டுச்செல்லும்.அப்படி எஞ்சியவற்றினை பிறவிலங்குகளான கழுதைப்புலி,கழுகு முதலானவைகள் உட்கொள்ளும்.அதிலும் எஞ்சியவற்றினை சிறிய பூச்சியினங்கள் உட்கொள்ளும்.அதிலும் மீதமானவை பாக்டீரியா,பூஞ்சைகள் ஆகியவற்றால் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படும்.இவ்வாறு இயற்கை அமைப்பில் எந்த பொருளும் வீணாவதில்லை.இயற்கை சுழற்சியின் அடிப்படையில் அனைத்தும் மற்சுழற்சிக்கு உட்பட்டவையே.உயிரினச்சுழற்சி இயற்கை அமைப்பினை சமன் செய்கிறது.மனித செயல்பாடுகளாலும் பெருகி வரும் கழிவுகளாலும் இந்த இயற்கை சுழற்சிகள் தடைபடுகின்றன.

நாம் நைத்துவகை கழிவுகளினையும் கலந்து இயற்கை அழிவுகளினைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல் வெளியேற்றுகிறோம்.நாம் உருவாக்கும் கழிவுகள் நம்மை விட்டு நீங்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா?

காய்கறி மற்றும் பழங்கள்              :-             1-2 மாதங்கள்
காகிதங்கள்                                           :-             1-2 மாதங்கள்
தெர்மக்கோல்கப்,தட்டுக்கள்        :-              50 வருடங்கள்
கேன்                                                       :-               80-200 வருடங்கள்
டயாப்பர்ஸ்                                         :-               450 வருடங்கள்
பிளாஸ்டிக்கவர்கள்                        :-               50-1000 வருடங்கள்
பாட்டில்கள்                                         :-               1 மில்லியன் வருடங்கள்

குப்பைகளினை தூக்கி வீசுவது என்பது மிக எளிது ஆனால் அதனை அப்புறப்படுத்துவது என்பது மிக கடினமான பணி.

நாம் என்ன செய்யவேண்டும்:

குப்பைகளினை மக்கும் குப்பை மக்காத குப்பை என வீடுகளிலேயே பிரித்து வழங்கவேண்டும்.

குப்பைகள் உருவாவதை குறைக்கவேண்டும்
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளினை மறுசுழற்சி செய்யவேண்டும்.
மறு உபயோகப்படுத்த இயலும் கழிவுகளினை மறு உபயோகப்படுத்தவேண்டும்


இன்றே துவங்குவோம்

எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம்.

குப்பைகள் கையாளும் விதங்கள் பற்றிய சிறு விளக்கப்படம் .




Download this Post as PDF



No comments:

Post a Comment