Saturday, 31 August 2013

நிலமெனும் நல்லாள் நகும்-தேசிய நீர்க் கொள்கை - 2012

தேசிய நீர்க் கொள்கை - 2012 

தேசிய நீர்க் கொள்கை - 2012 அறிவுறுத்தியபடி, இந்தியாவின் நீர்ஆதாரங்களை - நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் உள்ள நீர்அளவு குறித்த தகவல்களை - வரைபடமாக்கும் திட்டத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

மத்திய நீர்ஆதார அமைச்சகத்தின் சார்பில் நிறைவேற்றப்படவிருக்கும் இந்த "நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுத் திட்டம்', 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தியா முழுவதும் 8.89 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நீர்ஆதாரம் குறித்த வரைபட விவரத்தை நமக்கு அளிக்கும்.

இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.3319 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 14.36 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கான நீர்ஆதார வரைபடத்தை 13வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நிறைவேற்றவுள்ளனர்.

நதிநீர், ஓடை நீர் கிடைக்காத பெருவாரியான மக்கள் நிலத்தடி நீரைத்தான் குடிக்கவும், வயலுக்கு நீர்ப்பாய்ச்சவும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குளம் மற்றும் ஏரி, வாய்க்காலிலிருந்து தேவையான நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்திவந்த காலத்தில் நிலத்தடி நீர் குறையவில்லை. ஆனால், நகர் விரிவாக்கத்தாலும், தொழில்சாலை பெருக்கத்தாலும் சக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் நிலை உருவான பிறகுதான் இந்தியா முழுவதிலுமே நிலத்தடி நீர் கீழே இறங்கத் தொடங்கியது.

ஊரகப் பகுதியில் 85 விழுக்காடு குடிநீரும், நகர்ப்புறத்தில் 45 விழுக்காடு குடிநீரும் நிலத்தடியில் கிடைக்கும் நீர்தான். இதுதவிர, விவசாயத்துக்காகவும், தொழில்துறைக்காகவும்- பாட்டில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களும்கூட இதில் அடங்கும் - நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வெறும் 50 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்த பல இடங்களில், தற்போது 300 அடி ஆழத்துக்கும் அதிகமாக கீழே சென்றால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலைமை உருவான பிறகுதான், நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இப்போதுதான் வரைபடம் போடவே தொடங்கியிருக்கிறார்கள்.

நிலத்தடிநீர் இந்தியா முழுவதிலும் குறைகிறது என்கின்ற கணக்கீடே உத்தேசமானது. முழுமையான ஆய்வு செய்யப்பட்டால், மத்திய அரசு தரும் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் மிக மோசமான நிலைமையில் இருக்கும். மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம்தான் இந்த கணக்கெடுப்பைச் செய்கின்றது. அவர்கள் இந்தியா முழுவதிலும் 15653 கிணறுகளை ஆய்வுக் கிணறுகளாகக் கொண்டு, அந்தக் கிணற்றில் நீர் அளவு குறைவது மற்றும் கூடுவதை வைத்துத்தான் பொதுவான, சராசரியான கணக்கீட்டைச் செய்கிறார்கள்.

மாநில அரசுகள் இத்தகைய ஆய்வை தன்னிச்சையாக நடத்தி, தங்கள் மாநிலத்தில் உள்ள நிலத்தடி நீர் குறித்த விவரங்களை சேகரிப்பதில் எந்தத் தடையும் இல்லை. மாநிலப் பொதுப்பணித் துறையின் ஒரு பிரிவான நீர் வளத் துறை இத்தகைய ஆய்வுகளை சில இடங்களில் செய்கிறது என்றாலும் முழுமையாக இதில் ஈடுபடுவதில்லை.

இந்தியாவில் நிலத்தின் மேற்பரப்பிலும் நிலத்தின் அடியிலும் உள்ள, பயன்பாட்டுக்கு உகந்த மொத்த நீரின் அளவு 1121 பில்லியன் கனமீட்டர். இதில் நிலத்தடி நீரின் அளவு 431 பில்லியன் கன மீட்டர். நிலத்தின் மேற்பரப்பில் உள்ள 1121 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் 60 முதல் 70 விழுக்காடு விவசாயத்துக்குப் பயன்படுகிறது. தேசிய ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு குழுமம் அளித்த அறிக்கை, இந்தியாவில் உள்ள வாய்க்கால்களை மேம்படுத்துவதாலும், நீர் மேலாண்மையை விவசாயிகள் கடைப்பிடிக்கச் செய்வதாலும் தற்போதைய பயன்பாட்டு அளவில் மேலும் 40% கூடுதலாக, தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த முடியும் என்கின்றது.

மேலதிகமான நிலத்தடி நீர் சுரண்டல் என்பது, நிலத்தடி நீரை மேலும் அதலபாதாளத்துக்குக் கொண்டு செல்கின்றது என்பதோடு, நீரின் தரத்தையும் குறைத்துவிடுகிறது. இந்தியா முழுவதிலும் நிலத்தடி நீர்ச் சுரண்டல் என்பது சராசரியாக 61% என்று மதிப்பிடுகிறார்கள். இது 2009-ஆம் ஆண்டுக் கணக்கு. கடந்த 3 ஆண்டுகளில் இந்த அளவானது மேலும் அதிகரித்திருக்கும். தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நிலத்தடி நீர்ச் சுரண்டல் 100% எனப்படுகிறது.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழ்நாட்டில் 457 கிணறுகளில் ஆய்வு நடத்தியதில் 348 கிணறுகளின் நிலத்தடி நீர், முன்பு இருந்த அளவைக் காட்டிலும் கீழே போயுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் பரவலாக மேலும் பல நூறு கிணறுகளில் ஆய்வுகளை நடத்தினால், நிலத்தடி நீர் இருப்பு இன்னமும் மோசமாகக் குறைந்து இருப்பது தெரியவரலாம்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் மூலமாக நகர்வாழ் மக்களிடையே நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு தமிழக அரசு மேம்படுத்தியது. நிலத்தடி நீர்அளவு உயருவதற்கும் உதவியது. இருந்தும்கூட, நகர்ப்புறங்களின் அகோரப்பசிக்கு தீனிபோடும் அளவுக்கு நீலத்தடிநீர் அளவு உயரவில்லை என்பதே உண்மை.

மழையில்லாத காலங்களில் நிலத்தடி நீர் மட்டுமே மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும். ஆகவே, நிலத்தடி நீரை பயன்படுத்துவது குறித்து மிகத் தெளிவான சட்டங்கள் தேவையாக இருக்கின்றன.

"என் வீடு, என் நிலம், என் கிணறு, நான் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் எடுப்பேன்' என்று சொல்வது இனி சாத்தியமில்லை. "எத்தனை பேருக்காக, எந்தப் பயன்பாட்டுக்காக, எவ்வளவு தண்ணீர் எடுக்கிறோம்' என்று கணக்கு சொல்லியாக வேண்டிய கட்டாயம், கடப்பாடு இன்று நேர்ந்துள்ளது. நாடு தழுவிய அளவில் நீர்ச் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வான் பொய்த்தாலும் தான் பொய்யா நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாகச் சுரண்டினால், நிலமெனும் நல்லாள் நகும்.(நன்றி:தினமணி)

தேசிய நீர்க் கொள்கை - 2012 தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்

No comments:

Post a Comment