Saturday 31 August 2013

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?பாகம் 3

வரி விலக்கால் அதிகரித்த நிதிப் பற்றாக்குறை!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாறுமாறாக 339 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணமல்ல. நிதிப் பற்றாக்குறையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

அரசுக்கு வரும் வருவாயைவிடக் கூடுதலாகச் செலவழிப்பதே நிதிப் பற்றாக்குறையாகும். இப்போது மிக அதிகமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அபரிமிதமான நிதிப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டபோது ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளி இருக்கிறது என்பதுதான் உண்மை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை எந்த நிலையில், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 9 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறைக்கு அரசு ஆளாகியுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டு நிதிப் பற்றாக்குறை ரூ.22.66 லட்சம் கோடி. முதல் 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையாக இருந்துள்ளது. அதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.5 லட்சம் கோடியாக அதிகரித்தது.

2008-ல் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி உற்பத்தி மற்றும் சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்தது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் மட்டுமல்ல, கூடவே வருவாய்ப் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டது. முதல் இரண்டு பற்றாக்குறைகளும் அரசின் கவனக் குறையாலும், நிதி நிர்வாகத் திறமையின்மையாலும் ஏற்பட்டவை என்றால், வருவாய்ப் பற்றாக்குறை என்பது அரசு தெரிந்தே செய்த தவறு. விவரமுள்ள எந்த அரசும், நிதியமைச்சரும் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்.

வரிகள் குறைப்பு காரணமாக 5 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாக எகிறியது. முதல் 4 ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 0.75 லட்சம் கோடியாக இருந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கும், ரூபாயின் மதிப்புச் சரிவுக்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணி.

2008-ல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இப்போதும் சிறிதளவில் நடைமுறையில் உள்ளன. வரிகள் குறைப்பு என்பது நாட்டை கொள்ளையடித்தது என்பதுடன் மிக அதிகப்படியான நிதிப் பற்றாக்குறையையும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் உண்டாக்கி, ரூபாயின் மதிப்பைச் சரித்து, பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றனவே, அவர்களுக்கு மட்டுமே உதவியது.

ரூ.30 லட்சம் கோடி வருவாய் இழப்பு

ஆண்டுதோறும் பட்ஜெட்டின் பிற்சேர்க்கையில் வருவாய் இழப்பு குறித்த அறிக்கை இடம்பெறுகிறது. 2006-07 முதல் மத்திய அரசு வரி விலக்கு அளித்ததன் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த வரி விலக்கு ரூ.30 லட்சம் கோடி அளவுக்குச் சேர்ந்துள்ளது.

2008-ல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரி விலக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தது. ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் வரி விலக்கு இரு மடங்காக உயர்ந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்படும் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.16 லட்சம் கோடியாகவும், வரி விலக்கு ரூ.25 லட்சம் கோடியாகவும் உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையாக இருந்தன என்று காரணம் கூறப்பட்டது. அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் சர்வதேசப் பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது என்பது மன்மோகன் - சிதம்பரம் கூட்டணி முன்வைத்த வாதம்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்பைவிட இந்த "ஊக்குவிப்பு' காலகட்டத்தில்தான் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. 2005-06இல் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாக இருந்தது. அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிக அதிகமாக (9.5%) இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டோமானால், பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் 12.94% (2006-07) ஆகவும், 14.26% (2007-08) ஆகவும், 11.86% (2008-09) ஆகவும், 12.71% (2009-10) ஆகவும், 12.15% (2010-11) ஆகவும் அதிகரித்துள்ளது.

2005-06ஐ ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ.4.8 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் பயனில் பெரும் பகுதியை பெரிய தொழில் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை பலப்படுத்தவோ, பத்திரப்படுத்தவோ பயன்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழிப்பதற்குத்தான் பயன்பட்டன.

அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. 2008-09இல் 6.7 சதவீதமாகக் குறைந்தது. 2010-11 வரை சராசரியாக 9 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர்தான் குறையத் தொடங்கியது. மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு அளித்தது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (பக்கம் 66-68) அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், வரி விலக்கு அளிப்பதைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானதே என ஆலோசனையும் வழங்கியுள்ளது.

வரி விலக்குகளைத் திரும்பப் பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் 2005-லேயே உறுதி அளித்தனர். ஆனால், செய்யவில்லை. அப்போது அப்படிச் செய்யாததும், 2009-ல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாததுமே தவறான பொருளாதார நடவடிக்கைகளாக ஆகிவிட்டன.

ஊக்குவிப்பு வரி விலக்கு காரணமாக நிதிப் பற்றாக்குறை ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவும் 2011-12இல் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. மசோதா இப்போது மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதன் மூலம், ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறையில் மேலும் ரூ.2 லட்சம் கோடி உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தேசமே திவாலானாலும் பரவாயில்லை, பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது என்ற எண்ணம் வர்த்தகச் சந்தையில் தோன்றியுள்ளது. நிலைமை இப்படி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் வீழ்ச்சி அடையாது?(நன்றி:- தினமணி)

No comments:

Post a Comment