Wednesday 28 August 2013

மரபணு மாற்றப்பட்ட விதைகளையே விவசாயிகள் விரும்புகின்றனர்...அமைச்சரின் வக்காலத்து

மரபணு மாற்றப்பட்ட விதைகளையே விவசாயிகள் விரும்புகின்றனர்...

மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால் அதிக விளைச்சல், அதிக லாபம் கிடைப்பதோடு மட்டுமன்றி இப்பயிர்களில் பூச்சித் தாக்குதலும் இல்லாததால் நம் நாட்டு விவசாயிகள் இவற்றைப் பயிரிடவே அதிகம் விரும்புவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை(27.08.2013) கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து, அவர் கூறியது:

நம் நாட்டில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. அதே வேளையில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் விளைவிக்கப்படுகிறது. கடந்த 2002-03ஆம் ஆண்டில் 0.38 சதவீத இடத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிரிடப்பட்டு 86 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது. 2011-12ஆம் ஆண்டு 91.47 சதவீத இடத்தில் இப்பயிர் பயிரிடப்பட்டு 352 லட்சம் பேல் பருத்தி கிடைத்தது.

நமது விவசாயிகள், என்னை விட புத்திசாலிகளாக உள்ளனர். நமது நாட்டில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி அதிக அளவில் பயிரிடப்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாடு 46 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைந்து விட்டது. இதன்மூலம் நாட்டுக்கு அதிக அளவில் நன்மை கிடைத்துள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் அமெரிக்கா அதிக அளவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவித்து, அவற்றை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது. நம் நாட்டில் நிலவும் உணவு பாதுகாப்பு பிரச்னையைத் தீர்க்கும் காலம் வந்து விட்டது.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிரிட்டதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. இப்பருத்தியை பயிரிட்டதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரமாக விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

ஆந்திரம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்ய அனுமதித்துள்ளன.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு கட்டுப்பாடு விதிக்க விரும்பவில்லை. இந்தியா எப்போதுமே நம்பத்தகுந்த ஏற்றுமதியாளராக இருக்கவே விரும்புகிறது. இதனால் தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று சரத் பவார் தெரிவித்தார்.(நன்றி தினமணி)


என்ன சொல்ல இவரது கருத்துபற்றி..... நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு துணை போகிறார்கள்..

'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.பசுமைஅமைதி (கிரீன்பீஸ்) அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநந்தன், நாட்டில் நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவில் கத்தரிக்காய், கடுகு, நெல் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு களப் பரிசாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. களப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடங்கள், அந்தப் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, ஒவ்வாமைத்தன்மை அளவீடு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மறுஆய்வுக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி குறிப்பு போன்றவற்றை அளிக்குமாறு திவ்யா கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு எதிராக, மகாராஷ்டிரா கலப்பின விதை கழக நிறுவனம், மத்திய தகவல் கமிஷனுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் 2007 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதையும், மருந்துகள் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்வதும் பொது சுகாதாரத்துக்கு மிக முக்கியம். மனிதர்களிடம் அவை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய, களப் பரிசோதனை விவரங்கள் முக்கிய ஆதாரம். ஆனால் இந்த விவரங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. மறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'டிரிப்ஸ்' எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் 'வர்த்தக அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தத்தை' மீறி தகவல்களை வெளியிட முடியாது என்று மாஹிகோ நிறுவனம் கூறியுள்ளது.

''இந்தத் தகவல்களுக்கு ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டு விட்டதால், அவை வெளியிடப்படுவது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்று கூறுவது அப்பட்டமான பொய்'' என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். உணவு பாதுகாப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்றுதான் திவ்யாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது எந்த வகையிலும் வர்த்தக நலன்களை பாதிக்காது. பொது நலன் அடிப்படையில் மேற்கண்டது போன்ற தகவல்களை வெளியிடலாம் என்று தகவல் உரிமைச் சட்டம், டிரிப்ஸ் ஆகிய இரண்டின் கீழும் வழிவகை உண்டு.

ஆண்டாண்டுகாலமாக மறுவிவசாயத்திற்கு விதைகளினை சேமித்து வைத்து பழக்கப்பட்ட நமக்கு மான்சாண்டோ விதை நிறுவனத்திடம் விதைகள் வாங்கி பயன்படுத்தும் வகையில் மாற்றிவருகின்றனர்.

அன்று கிழக்கிந்திய கம்பேனிக்காக இராபர்ட் கிளைவ் இந்தியாவை அடிமைப்படுத்தினான்.ஆனால் இன்று பணத்திற்காக   மான்சாண்டோ போன்ற விதை நிறுவனத்திடம் நம்மை அடிமைப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முயற்சிக்கிறார்கள்.

நாம் நேரிடையாக இந்த சுதந்திரபோரில் பங்கு கொள்ளமுடியவில்லை எனினும் இணையம் மூலமாகவாவது நம் எதிர்ப்பினை பதிவு செய்வோமே..நம் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் கண்களினை திறக்கட்டுமே.

எதிர்ப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள்
இந்த போரில் பங்கு கொள்ள இங்கே சொடுக்குங்கள்
மேலும் விவரங்களுக்கு


2 comments:

  1. Govt not care about the people.Why Govt encourage GMF? how aware are people of GMF. Thanks.

    ReplyDelete
  2. Yes,Govt sell our country to Seed producers like Monsonto.

    ReplyDelete