Friday, 30 August 2013

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 2

கச்சா எண்ணெய், தங்கம் மட்டுமே காரணமல்ல!
எப்படி நடப்புக் கணக்கில் உபரி பற்றாக்குறையானது என்பதையும், இறக்குமதி அதிகரித்து உற்பத்தி குறைந்தது என்பதையும் ஆட்சியில் இருக்கும் பொருளாதார மேதைகள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். அதற்கு இவர்கள் சொன்ன சமாதானம், சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலை.

தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் காரணமாகக் கூற முடியாது. ஏனென்றால், 2008-09இல் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-10இல் 8.6 சதவீதமாகவும், 2010-11இல் 9.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை முதலில் முதலீடுகளையும், பின்னரே உற்பத்தியையும் பாதிக்கும். முதலீடு சுருங்கிய பிறகுதான் உற்பத்தி வீழ்ச்சியடையும். ஆனால், இங்கு முதலீடு (மூலதனப் பொருள் இறக்குமதி) மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்தும், உற்பத்தி பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. இது என்ன புதிர்?

பிந்தைய 5 ஆண்டுகளில், மூலதனப் பொருள்களின் அதிகரித்த இறக்குமதிதான் தேசிய உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறக்குமதி அதிகரித்ததால் உள்ளூர் மூலதனப் பொருள் தொழில் துறை சரிவைச் சந்தித்தது. 2009-10இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதமாக அதிகரித்தபோதும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லாமல் தொழில் துறை உற்பத்தி வெறும் 5.3 சதவீதம் அதிகரித்தது.

பின்னர் மூலதனப் பொருள் உற்பத்தி 2011-12இல் 4 சதவீதமும், 2012-13இல் 5.7 சதவீதமும் சரிவைக் கண்டது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இடைநிலைப் பொருள்களின் உற்பத்தியும் அதிகரிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள் தொழில் துறையை, மூலதனப் பொருள் இறக்குமதி சுனாமி போல தாக்கிய நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமெனப் பாய்ந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது (2001-04) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி வெறும் 600 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) டாலராக இருந்தது. ஆனால், 2004-05 முதல் 2012-13 வரை வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதி 8 மடங்கு அதிகரித்து சராசரியாக ஆண்டுக்கு 5.5 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலராக உயர்ந்தது.

இதே காலகட்டத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 மடங்கு உயர்ந்தது. இது தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்குதான். 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதி 50 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வெறும் 2.3 பில்லியன் டாலராக இருந்தது. மூலதனப் பொருள் இறக்குமதி தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில் அழிக்கவே செய்தது. தேசிய உற்பத்தி அழிவுக்கு, தயாரிக்கப்பட்ட பொருள்களின் இறக்குமதியும் காரணமாக அமைந்தது.

உற்பத்தியை அழித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

வர்த்தக உபரி என்பது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும், வர்த்தகப் பற்றாக்குறை என்பது அதைக் குறைக்கும் என்பதும் அடிப்படைப் பொருளாதாரம் ஆகும். எனவே, வர்த்தகப் பற்றாக்குறையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம், அதே அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்தது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2007-08இல் 0.8 சதவீதமும், 1.5 சதவீதமும் (2008-09), 2.1 சதவீதமும் (2009-10), 1.4 சதவீதமும் (2010-11), 2.6 சதவீதமும் (2011-12), 3.9 சதவீதமும் (2012-13) குறைத்துள்ளது. ஒரு கணக்குக்காக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விலக்கிவிட்டால், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007-08இல் 10.8 சதவீதமாகவும் (9.3% அல்ல), 2008-09இல் 8.2 சதவீதமாகவும் (6.7% அல்ல), 2010-11இல் 10.7 சதவீதமாகவும் (8.6% அல்ல), 2011-12இல் 8.8 சதவீதமாகவும் (6.2% அல்ல), 2012-13இல் 8.9 சதவீதமாகவும் (5% அல்ல) இருந்திருக்கும்.

கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பை ஓரளவுக்கு விழுங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மூலதனப் பொருள்களுக்கும் இவற்றுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் உள்ளன.

சர்வதேச உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் அளவு தங்கத்தை இந்தியர்கள் வாங்குகிறார்கள். இந்தியாவின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான் பெட்ரோலியப் பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதி நான்கில் மூன்று பங்கை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை. அது மட்டுமே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஏற்பதற்கில்லை.

ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்படும் இதர வெளிநாட்டுப் பொருள்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையில்லாமல் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை மிக அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய மன்மோகன் சிங் அரசு அனுமதித்ததால், உள்நாட்டு மூலதனப் பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவையும் குறைத்துவிட்டது.

கச்சா எண்ணெய், தங்கம் காரணமல்ல!

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு கச்சா எண்ணெயும், தங்கமும் மட்டுமே காரணமல்ல அல்லது ஓரளவே காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் 402 பில்லியன் டாலருக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலைமதிப்பற்ற கற்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பார்ப்பதற்கு இது பெரிய தொகை போலத் தோன்றலாம். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் 251 பில்லியன் டாலர் மதிப்புக்கு நகைப் பொருள்களும், விலைமதிப்பற்ற கற்களும் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இறக்குமதி செய்யப்பட்ட தங்கமும், வைரம் போன்ற கற்களும் ஆபரணங்களாக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கின்றன. இதைக் கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 9 ஆண்டுகளில் 151 பில்லியன் டாலர்தான்.

அதேபோல, 9 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருள்கள் 804 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 279 பில்லியன் டாலரை கழித்துவிட்டால் நிகரப் பற்றாக்குறை 525 பில்லியன் டாலர் ஆகும். இது 587 பில்லியன் டாலர் மூலதனப் பொருள் இறக்குமதியைவிடக் குறைவானதே ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியின் நிகர மதிப்பு 360 பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் 407 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி தவிர்க்க முடியாதது, சரி. மூலதனப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி இருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்ததால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது என்றும், உள்ளூர் உற்பத்தியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதித்தது என்றும் கூறுவதற்கு ஒரு ஞானி வேண்டுமா என்ன? சாதாரண மனிதனுக்குக்கூட தெரியும் இந்த உண்மை. பொருளாதார மேதைகளுக்குத் தெரியாதா என்ன?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் ஏற்படும் ஒரே ஒரு விளைவை மட்டும் பார்ப்போம். எண்ணெய் இறக்குமதிக்காக டாலரை வாங்குவதற்கு கூடுதலாகச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், இந்தியா எண்ணெய்க்காக செலவழிக்கும் தொகையை ரூ.9,500 கோடி அதிகரிக்கச் செய்துவிடும். இப்போதைய ரூபாய் மதிப்பினால், இந்தியா எண்ணெய் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1.60 லட்சம் கோடி செலவழிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

பொருளாதாரச் சீரழிவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஒரு காரணம் மட்டுமே. (நன்றி தினமணி)

No comments:

Post a Comment